"சம்பத் மனம்பேரி வீட்டில் சிக்கிய மிக முக்கிய ஆவணங்கள்.." : கையடக்கத்தொலைபேசியும் மீட்பு

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி தங்கியிருந்த வீட்டிலிருந்து, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐஸ் என்ற போதைப்பொருள் உற்பத்திக்கான மூலப்பொருட்களுடன் காணப்பட்ட இரண்டு கொள்கலன்கள் தொடர்பான ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதோடு அந்த கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதற்கான பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டுக்களும் அந்த ஆவணங்களுடன் காணப்படுவதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கொள்கலன்கள் தொடர்பான ஆவணங்கள் மித்தெனியவைச் சேர்ந்த ஒருவரின் வசம் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பத் மனம்பேரியின் கையடக்க தொலைபேசியும் அந்த நபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவருக்குச் சொந்தமான நான்கு வங்கி அட்டைகளும் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து அகற்றுவதற்கோ அல்லது மித்தெனியவிற்கு கொண்டு வருவதற்கோ சம்பத் மனம்பேரி ஈடுபடவில்லை என்று அவரின் சட்டத்தரணிகள் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

கொள்கலன்கள் தொடர்பாக உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு காரணமாக, சம்பத் மனம்பேரி முன்வந்து அவற்றை எரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவருடைய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.  

இருப்பினும், சம்பத் மனம்பேரியிடம் விசாரணை நடத்தி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவருக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய ஒருவரை கைது செய்துள்ளனர்.


நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு பொலிஸாரிடமிருந்து மறைந்திருந்த சம்பத் மனம்பேரி என அழைக்கப்படும் சம்பத் வன்னி ஆராச்சிகே பேரிக்கு, மின்சார சபை ஊழியர் ஒருவரால் இந்த வசதிகள் செய்து வழங்கப்பட்டுள்ளன.

சம்பத் மனம்பேரி, வாட்ஸ்அப் மூலம் பாதாளகுழு தலைவர்களான பெக்கோ சமன், கெஹெல்பத்தர பத்மே மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோருடன் தொடர்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.